நடிகை ஜோதிகாவின் "பொன்மகள் வந்தாள்" திரைப்படத்தினால் 9 வயது பாலியல் பலாத்காரத்திற்கு நீதி கிடைத்தது.
ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தின் காரணமாக, சிறுமி தன் தாயிடம் பாலியல் தொல்லை கொடுத்த உறவினரைப் பற்றி கூற, நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வழங்கியுள்ளது.
சூர்யா தயாரிப்பில் ஜோதிகா கதாநாயகியாக நடித்து கடந்த வருடம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான படம் ´பொன்மகள் வந்தாள்´. ஜே.ஜே. ஃபெட்ரிக் இயக்கியிருந்த இந்தப் படம் தொடர்ச்சியாக பெண் குழந்தைகள் பாலியல் துன்புறுத்துதலுக்குள்ளாக்கப்பட்டு வரும் சமூகத்தின் முக்கிய பிரச்னையை இந்தப் படம் பேசியிருந்தது.
மேலும், பெண் குழந்தைகள் தங்களுக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தால் உடனடியாக அவர்கள் தங்கள் தாயிடம் தெரிவிக்க வேண்டும் என்ற கருத்தை இந்தப் படம் வலியுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் சென்னை பிராட்வே பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் தங்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் தங்களின் குழந்தையை, உறவினரின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து சில மாதங்கள் கழித்து சிறுமியை, தாய் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அப்போது சிறுமி தொலைக்காட்சியில் ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படத்தைப் பார்த்துள்ளார். அந்தப் படத்தில் தாயிடம் எதையும் மறைக்கக் கூடாது என்ற வசனம் வரும்.
அதனைக் கேட்ட சிறுமி, தனக்கு உறவினர் பாலியல் தொல்லை கொடுத்ததை தாயிடம் தெரிவித்துள்ளார். அதனைக் கேட்ட சிறுமியின் தாய், ராயபுரம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
விசாரணையில் குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததது.
இந்த செய்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த ஜோதிகா, அமைதியை உடையுங்கள். ஒவ்வொரு முறையும் ஒரு பெண் தனக்காக குரல் கொடுத்தால், அவள் அனைத்து பெண்களுக்காகவும் பேசுகிறாள் என்று பொருள் என்று குறிப்பிட்டுள்ளார்.